பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாம்.
Sardar 2 Shooting Wrapped : மெய்யழகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் கார்த்தி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சர்தார் 2, இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இதன் முதல் பாகம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டு, அதன் ஷூட்டிங் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தான் சர்தார் 2 படத்தையும் தயாரித்து உள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் மாளவிகா மோகனன், ரெஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பதாக இருந்தது. ஆனால் அவர் பாதியில் விலகியதால் அவருக்கு பதில் சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். சர்தார் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
சர்தார் 2 ஷூட்டிங் நிறைவு
இந்த நிலையில், அப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்க படக்குழு பாங்காக் சென்றிருந்தது. அங்கு அதிரடி ஆக்ஷன் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த ஷூட்டிங்கில் கார்த்தி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இந்நிலையில், பாங்காக்கில் படப்பிடிப்பை நிறைவு செய்த சர்தார் 2 படக்குழு, அங்கு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதுவும் அங்குள்ள ஹுவாஹின் ஏர்போர்டின் வெளியே படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சர்தார் 2 எப்போ ரிலீஸ்?
சர்தார் 2 திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயத்தில் சூர்யாவின் 45வது படமும் ரிலீஸ் ஆவதால், தீபாவளி ரேஸில் இருந்து விலகியது சர்தார் 2. இதையடுத்து 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அப்படம் திரைக்கு வரும் என கூறப்பட்டு வந்தது. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவதால், அதனுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளதால், சர்தார் 2 படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.