ஐஸ் டீ நல்லதா அல்லது கெட்டதா என்பதை அறிய இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தற்போது கோல்ட் காபியை போலவே ஐஸ் டீயும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. ஆனால் இந்த டீ குடிப்பது உடலுக்கு நன்மைகளை வழங்குமா அல்லது பாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா என்று பலர் குழப்பத்தில் உள்ளனர். எது உண்மை என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மையில், ஐஸ் டீ நல்லதா அல்லது கெட்டதா என்பதை அது தயாரிக்கப்படும் விதத்தைப் பொறுத்து தான் செல்ல முடியும். அதாவது சர்க்கரை சேர்க்காத ஐஸ் டீயை தயக்கமின்றி தாராளமாக குடிக்கலாம். அது ஆரோக்கியமானது தான் ஏனெனில், அந்த டீயில் ஆன்ட்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. அவை உடலுக்கு ரொம்பவே நல்லது. அதுவே சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட ஐஸ் டீ ஆரோக்கியத்திற்கு மோசமான தீங்கு விளைவிக்கும். ஆகவே சர்க்கரை சேர்க்காத ஐஸ் டீ குடிப்பதன் நன்மைகள் மற்றும் சேர்த்த ஐஸ் டீ குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சர்க்கரை சேர்க்காத ஐஸ் டீ நன்மைகள் :

ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் - இந்த ஐஸ் டீயில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட பெரிதும் உதவுகின்றது.

உடல் நீரேற்றம் - உடலில் நீர்ச்சத்து குறையாமல் நீரேற்றமாக இருக்க ஐஸ் டீ உதவும்.

பல் ஆரோக்கியம் - சர்க்கரை சேர்க்காத ஐசி பற்களுக்கு எந்தவிதீங்கையும் ஏற்படுத்தாமல் ஆரோக்கியமாக வைக்க உதவும்.

நோய் எதிர்ப்பு சக்தி - ஆமாங்க நீங்க கேட்பது சரிதான். ஐஸ் டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. இந்த டீயில் இருக்கும் ஆக்சிஜனேற்றிகள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஆதரிப்பதால், சளி காய்ச்சல் போன்ற தொற்று நோய் வராமல் உங்களை பாதுகாக்கும்.

உடல் எடை இழப்பு - உடல் எடையை குறைக்க நினைப்பபவர்களுக்கு சர்க்கரை சேர்க்காத இந்த ஐஸ் டீ மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த டீ யில் கலோரிகள் மிகவும் குறைவு.

சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீ தீமைகள் :

அதிக சர்க்கரை உள்ளடக்கம் - சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீயில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகமாக இருப்பதால் அதன் விளைவாக உடல் பருமன் அதிகரிப்பது மட்டுமல்லாமல், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் போன்ற ஆபத்தான நோய்களின் அபாயத்திற்கு வழிவகுக்கும்.

நீரிழப்பு - சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீயில் இருக்கும் அதிகப்படியான காஃபின் காரணமாக உடலில் சில சமயங்களில் நீரிழிப்பு ஏற்படலாம்.

தூக்கமின்மை - அதிகளவு காஃபின் குடிப்பது தூக்கமின்மைக்கு வழிவகுக்கும். மேலும் தூக்கம் முறையும் சீர்குலைந்து விடும்.

இரும்புச்சத்து குறைபாடு - சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீயில் இருக்கும் டானின்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.

ஒற்றைத் தலைவலி - சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீ குடிப்பது சிலருக்கு தலைவலி, ஒற்றை தலைவலி போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும். சில சமயங்களில் குமட்டல், வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும்.

பல் சொத்தை - அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட ஐஸ் டீ குடித்தால் பல் சொத்தையை ஏற்படுத்தும்.

குறிப்பு : நீங்கள் ஐஸ் டீ குடிக்க விரும்பினால் வீட்டில் தயாரித்து அளவுடன் குடியுங்கள். கடைகளில் பாட்டிலில் விற்கப்படும் ஐஸ் டீ உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.