தமிழ்ச் சமூகத்துடன் மிகுந்த தொடர்புடையது கொய்யாப் பழம். இன்னும் தமிழகத்தின் மேற்கு மாவட்டப் பகுதிகளில் கொய்யா மரங்கள் இல்லாத வீடுகளே இருக்காது. சிவப்பு கொய்யா மரம், வெள்ளை கொய்யா மரம், மஞ்சள் கொய்யா மரம் என்கிற வகை வகையான கொய்யா மரங்கள் அங்கு உள்ளன. இதுபோன்று தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கொய்யா மரங்களை விரும்பி வளர்ப்போர் இருக்கின்றனர். ஆனால் வெறும் கொய்யாப் பழத்துக்காக மட்டுமே கொய்யா மரங்களை பலரும் வளர்க்கின்றனர். ஆனால் கொய்யா பழத்துக்கு இணையான, மருத்துவக் குணங்களை கொண்டது கொய்யா மர இலைகள். அதில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. துவர்ப்பு சுவை கொண்ட இந்த இலைகளை, கால்நடைகளும் விரும்பி உண்ணும்.